திடீரென தீப்பிடித்த கார்- உடல் கருகி உயிரிழந்த நபர்

Jun 28, 2021 03:00 PM 423

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்ததில், உள்ளே இருந்த நபர் கருகி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பாடியில் இருந்து கோயம்பேடு வழியாக அரும்பாக்கம் செல்லும் சாலையில், மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்தவர் சூதாரிப்பதற்குள் காரில் தீ பற்றி மளமளவென பரவியது. இதில் ஓட்டுநர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் வெளியே செல்ல முடியாமல், உள்ளேயே சிக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையிலேயே நெருப்பில் வெந்ததில், எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சியது. கோயம்பேடு மற்றும் அம்பத்தூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்துவதற்குள், கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. உள்ளே இருந்த நபர் யார் என்பது குறித்த காவல்துறையினர் விவரம் சேகரித்து வருகின்றனர்.

Comment

Successfully posted