மருத்துவபடிப்பில் 50% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Jul 13, 2020 04:13 PM 216

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு, 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய வழக்கில் விசாரணையை விரைந்து முடிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணையின் போது இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தினர். இதன்பின்னர் அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் கடந்த மாதம் 22-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் வழக்கை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்டு இந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆனால் இந்த விசாரணையை விரைந்து முடிக்க கோரி தமிழக அரசு சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Comment

Successfully posted