சட்ட விரோத தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம் அதிரடி

Oct 07, 2020 05:21 PM 674

தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனாப் பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர் ஆலைகள் தற்காலிகமாக இயங்க அனுமதித்து இடைக்கால உத்தரவை வழங்கினர்.

மேலும், இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதத்தை ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசுக்கு வழங்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்காத நிறுவனங்களை உடனடியாக மூட உத்தரவிடலாம் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

இதே போன்று சட்ட விரோதமாக இயங்கும் அனைத்து தண்ணீர் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Comment

Successfully posted