ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஏற்கக்கூடாது - தமிழக அரசு

Dec 06, 2018 03:36 PM 325

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஏற்கக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து வேதாந்தா குழுமத்தினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழுவை நியமித்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அந்தக் குழுவினர், முன்னறிவிப்பின்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது தவறு என்று அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலை தொடர்பாக ஆய்வு செய்து தங்களது பரிந்துரைகளை மட்டுமே ஆய்வுக்குழு அளிக்க முடியும். தவிர ஆலையை திறக்க கட்டளையிட அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அறிக்கையை ஏற்கக் கூடாது என்று தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted