கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமல்

Apr 26, 2021 12:43 PM 842

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

 தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துற்காக, அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்கவும் அனுமதி இல்லை. புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னையில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

இருப்பினும் கோயில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் கோயில் வெளியிலேயே நின்று தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக, திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்டவர்கள், கோயிலின் வாசலிலேயே நின்று திருமணம் செய்து கொண்டனர்.

இதேபோன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டதால், வாயில்களிலேயே பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அரசு தடை விதித்துள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில், பார்சல் மட்டுமே வழங்கப்பட்டன. ஹோட்டலில் அமர்ந்து உண்ண வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

கோவையில், அத்தியாவசிய தேவைகளுக்கான காய்கறி கடைகள், மளிகை கடைகள் குளிர்சாதன வசதியின்றி வழக்கம் போல் செயல்படுகின்றன. மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted