மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தும் கடலுக்கு செல்ல முடியாமல் கலக்கமடைந்துள்ள நாகை மீனவர்கள்

Jun 15, 2021 11:14 AM 344

ஊரடங்கு காரணமாக படகை சீரமைக்க பொருட்கள் கிடைக்காததாலும், டீசல் விலை உயர்வாலும் கலக்கமடைந்துள்ள நாகை மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாததால், ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அப்போது, மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது நீக்கி, புதுப்பிப்பது வழக்கம். நடப்பாண்டு மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தளவாட பொருட்கள் வாங்க முடியாததால், படகை சீரமைக்கும் பணியே இன்னும் முடிவடையவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பொதுபோக்குவரத்து இல்லாத நிலையில், தாங்கள் பிடித்து வரும் மீன்களை வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள கூறினர். நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலையை சமாளித்து எவ்வாறு மீன்பிடிப்பது என ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஊரடங்கு காரணமாக உதிரி பாகங்கள் கிடைக்காததால் படகுகளை பழுது நீக்கும் பணிகள் முழுமை பெறவில்லை என்பதாலும், ஊரடங்கு காரணமாக மீன்கள் விற்பனை மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்ற காரணத்தாலும் மீன்பிடிப்புக்கு செல்லவில்லை என்று மீனவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், டீசல் விலை உயர்வாலும் வேதனையடைந்துள்ள மீனவர்கள், மானியத்தை உயர்த்தி வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Comment

Successfully posted