ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக கோரிக்கைகள் பரிசீலிப்பு : அமைச்சர் ஜெயக்குமார் நன்றி

Sep 21, 2019 07:33 PM 127

37வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பாக முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் கனிவாக பரிசீலிக்கப்பட்டதற்கு, மத்திய நிதியமைச்சருக்கு, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

37வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. தமிழகம் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை, பரிசீலித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக, தமிழகம் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டதை அரசு முதன்மைச் செயலாளர் பாலசந்திரன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வெட் கிரைண்டர்கள் மீதான வரியானது 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் தொழிலில், சில்லறை வேலை தொடர்பான சேவைகளுக்கான வரியானது 18% இருந்து 12 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், கரும்பு, வெல்லம் ஆகியவற்றினை சேமித்து வைப்பது தொடர்பான சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து முற்றிலுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கையான காய்ந்த புளி, மரத்தட்டுகள் மற்றும் மரத் தொன்னைகளுக்கு வரியிலிருந்து முற்றிலுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரம் கருதி ஜூலை 1ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரையிலான காலத்திற்கு மீன் துகள்களுக்கு முழு வரி விலக்கு வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள 65 பொருட்கள் மற்றும் 5 சேவைகள் மீது வரி குறைப்பு செய்திடவும், வரிவிலக்கு பெறவும் இனிவரும் காலகட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted