அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சம் செலவில் குடைகளை வழங்கிய ஆசிரியர்

Sep 20, 2019 10:01 AM 193

மழையில் நனைந்த படி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதால் உடல் நலன் பாதிக்கபடுவதோடு படிப்பும் தடைப்படும். இதனை கருத்தில் கொண்டு 15 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் குடைகளை வழங்கியுள்ளார் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா சித்ரவேல், தொடக்க பள்ளி ஆசிரியரான இவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் போது புதுமையான முறைகளை கையாள்வதுண்டு. இந்த நிலையில் மாணவர்கள் எதிர்வரும் மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் குடைகளை வழங்க முடிவு செய்தார் வசந்தா. இதையொட்டி வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் நாடிமுத்து தொடக்கப்பள்ளியில், 15 அரசு பள்ளியில் உள்ள ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக குடைகளை வழங்கியுள்ளார்.

இதை பற்றி அவர் கூறும் போது ஏற்கனவே கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை மாணவர்கள் பள்ளிக்கு வர மழை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதால் தன்னால் முடிந்த உதவியாக இதனை செய்ததாக கூறுகிறார் வசந்தா சித்ரவேல்.

இவரை குறித்து வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் கூறுகையில் கற்பித்தல் மற்றும் சமூக பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதாக குறிபிடுகின்றார். இனிமேல் மாணவர்கள் மழையில் நனைந்த படி பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வெளிபடுத்திய ஆசிரியை வசந்தா அனைத்து ஆசிரியர்களுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.

Comment

Successfully posted