அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி - அதிமுக தலைமை

May 03, 2021 12:59 PM 1746

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு, கழக தலைமை நன்றி தெரிவித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 10 ஆண்டுகால ஆட்சியில், அதிமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றியுள்ள அரும் பணிகளை அனைவரும் நன்கு அறிவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி என்றும், ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும், செயல்பட வேண்டிய கடமை நமக்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி என்னும் பெரும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் மனத் தூய்மையுடனும், கழகத்தின் வழி நின்றும் செவ்வனே நிறைவேற்றுவோம் என்று கூறப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு, பகல் பாராது அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி இருக்கும் அதிமுக, தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றுவதற்கும், கழகத்தைக் கட்டிக் காக்கும் கடமையில் தோளோடு, தோள் நின்று உழைப்பதற்கும், கழக உடன்பிறப்புகள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comment

Successfully posted