4 வது தொழில் புரட்சி கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் - பிரதமர் நம்பிக்கை

Oct 12, 2018 03:21 AM 393

கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், வேலைகளின் தன்மையை மாற்றுவதற்கும் 4 வது தொழில் புரட்சி வழி வகுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 4 வது தொழில் புரட்சி மையத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், 4 வது தொழில் புரட்சியின் பயன்களை பெற கொள்கை மாற்றங்களுக்கு அரசு தயாராக உள்ளதாகவும், இந்த தொழில் புரட்சியின் மூலம் செயற்கை அறிவுத் திறன், கருவிகள் குறித்த கல்வி, இணையதளம் உள்ளிட்டவற்றில் இந்தியா புதிய உச்சத்துக்கு செல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.

உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவில் இணையதளம் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், இணையதளங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 30 மடங்காக உயர்ந்துள்ளதாகவும், கூறினார்.

மேலும், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிக் ஃபைபர் இணைக்கும் பணி விரைவில் முடிவடைய உள்ளதாகவும், 4 வது தொழில் புரட்சி, வேலைகளின் தன்மையை மாற்றி கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Comment

Successfully posted