மக்களவை தேர்தலையொட்டி, பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Apr 15, 2019 03:56 PM 108

மக்களவை தேர்தலையொட்டி, பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.

நாளை மாலை 6 மணி முதல் தேர்தல் முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் விதிமுறைகள் செயல்பாட்டில் இருக்கும் என்றும், மதுரை தொகுதி நீங்கலாக மற்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு மதுரை தொகுதியில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் விவகாரம் குறித்து வாட்ஸ் ஆப், முகநூல், ட்விட்டர், போன்றவற்றில் பரப்பக்கூடாது என்றும், தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி, இணையம் உட்பட எந்த மின்னணு தகவல் தொடர்பிலும் தேர்தல் விவகாரம் குறித்து பகிரக்கூடாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், இசை நிகழ்ச்சி போன்ற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் தேர்தல் பரப்புரை செய்தா தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 132 கோடியே 91 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதையடுத்து 65 கோடியே ஒரு லட்சம் ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வருமான வரித்துறை மூலம் 55 கோடி 2 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 286 கோடி ரூபாய் மதிப்புள்ள 998 கிலோ தங்கம், 642 கிலோ வெள்ளி மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவு மையத்தில் 100 மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல் உயர் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை இல்லை என்றும் கூறியுள்ளது.

Comment

Successfully posted