விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலம்!

Feb 18, 2021 07:18 PM 4662

ஐ.பி.எல். 14ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் தொடங்கியது. இதில் ஐ.பி.எல். வரலாற்றிலேயே தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸை அதிக தொகைக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளார்.

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 14ஆவது ஐ.பி.எல். சீசனில் களமிறங்கும் வீரர்களுக்கான ஏலம் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை, டெல்லி அணி 2 கோடியே 20 லட்சத்துக்கு வாங்கியது. இதே போல் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல்லை வாங்க சென்னை, பெங்களூரு அணிக்குள் கடும் போட்டி நிலவியது. இறுதியாக பெங்களூரு அணி மெக்ஸ்வெலை 14 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

இதன் பின்னர் மனம் தளராத சென்னை அணி, இங்கிலாந்து அணி ஆல் ரவுண்டர் மொயின் அலியை 7 கோடி ரூபாய்க்கு வாங்கியது. 75 லட்சம் ஆரம்ப விலையாக கொண்ட தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸை, 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் வென்றது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொலைக்கு ஏலம் போன வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை மோரிஸ் முறியடித்தார். ஆஸ்திரேலிய வீரர் ஜெய் ரிச்சர்ட்சனை 14 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

தமிழ்நாட்டு ஷாரூக்கானின் ஆரம்ப விலை 20 லட்சமாக இருந்த நிலையில், பஞ்சாப் அணி அவரை 5 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதே போன்று கர்நாடக வீரர் கிருஷ்ணப்பா கவுதமை 9 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிபுல் ஹசனை, 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணியும், இங்கிலாந்து வீரர் டேவிட் மாலனை ஒன்றரை கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியும் ஏலத்தில் எடுத்தது. இந்திய வீரர் சிவம் துபேவை ராஜஸ்தான் அணி 4 கோடியே 40 லட்சம் ரூபாய்ககு ஏலத்தில் எடுத்தது.

இதனிடையே, இந்திய வீரர்கள் கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங் மற்றும் வெளிநாட்டு வீரர்களான ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஆரோன் பிஞ்ச் உள்ளிட்டோர் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.

 

Comment

Successfully posted