மில்லியன்டாலர் கேள்விக்கு கிடைத்த பதில் - இந்தியாவின் கொரோனா தடுப்பூசி!

Jul 03, 2020 09:37 PM 14230

கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பு மருந்தை வரும் 7-ம் தேதி முதல் சோதனை முயற்சியாக பரிசோதிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரசுக்கு எப்போது மருந்து கண்டுபிடிக்கப்படும்? உலகம் முழுவதும் தொடர்ந்து எழுப்பட்டு வரும் மில்லியன் டாலர் கேள்வி இது.. சீனாவின் வூஹான் நகரில் இருந்து உலகம் முழுவதும் பரவிய இந்த வைரசால் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை குணப்படுத்தவோ அல்லது வராமல் தடுக்கும் மருந்தையோ கண்டுபிடிக்கும் பணி சர்வதேச மருத்துவ நிபுணர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது..

ஒரு பந்தயத்தை போல் தொடரும் இந்த ஆராய்ச்சியில் தற்போது முன்னிலையில் உள்ளது இந்தியாவை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம். ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் கோவேக்சின் எனும் தடுப்பூசியை தயாரித்துள்ளது. வீரியம் குறைந்த வைரஸை உடலுக்குள் செலுத்தி நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதே இந்த தடுப்பூசியின் முக்கிய அம்சம்..

ஆரம்ப நிலையில் இதனை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் வெற்றி கிடைத்தது. இதனால் வரும் 7-ம் தேதி முதல் மனிதர்கள் மீது பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான தன்னார்வலர்களின் உடலில் செலுத்தி இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்படும்.. பின்னர் இதை பயன்படுத்துவது எந்த அளவிற்கு பாதுகாப்பானது? நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்ப்பார்த்த அளவிற்கு அதிகரிக்க செய்கிறதா? பக்க விளைவுகள் ஏதும் உருவாகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.. இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 100-க்கும் மேலானவர்கள் மீது இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்படும், இதன் முடிவுகளும் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்தால் மூன்றாம் கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 1300 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.

திட்டமிட்டபடி இந்த சோதனைகள் அனைத்தையும் விரைந்து முடிக்குமாறு பாரத் பயோ டெக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்... சோதனையின்போது கொரோனா தொற்றை தடுப்பதில் இந்த தடுப்பூசி எந்த அளவிற்கு வெற்றி பெற்றது எனும் முடிவுகளை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது...

தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ரேஸில் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் இந்த சோதனை முடிவுகள் வெற்றி பெற்றால் உலகமே பார்த்து மிரளும் கொரோனாவை ஒழித்த பெருமை இந்தியாவின் வசமாகும்...

Comment

Successfully posted