சித்தகங்கா மடாதிபதியின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர்,பிரதமர் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்

Jan 22, 2019 12:11 PM 327

பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீசிவகுமார சுவாமியின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர்,பிரதமர் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராகவும், லிங்காயத் சமுதாயத்தின் ஆன்மிக தலைவராகவும் ஸ்ரீசிவகுமார சுவாமி திகழ்ந்தார். மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் பெற்றுள்ளார். வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஸ்ரீசிவகுமார சுவாமி, கடந்த ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மடத்துக்கு திரும்பினார். இந்தநிலையில், அவரது உடல்நிலை, திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனின்றி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்.

சிவக்குமார சுவாமி உடலுக்கு முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர்கள் சதானந்தா கவுடா, எடியூரப்பா உள்ளிட்ட அரசியர் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஸ்ரீசிவகுமார சுவாமியின் இறுதிச்சடங்கில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

Comment

Successfully posted