பிரிட்டன் அரசி எலிசபெத் தலைமையில் அரச உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம்

Jan 13, 2020 09:02 AM 731

அரச குடும்பத்தின் முதன்மை உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தைக் கைவிடுவதாக பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அறிவித்தது குறித்து விவாதிக்க பிரிட்டன் அரசி அவசர ஆலோசனைக் கூட்டத்திற்காக உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிட்டன் இளவரசர் ஹாரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மேகன் மார்க்கலை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை உள்ளது. திருமணம் நடைபெற்ற நாளில் இருந்தே மேகனுக்கு அரச குடும்பத்தின் விதிமுறைகளில் முரண்பாடு இருந்து வந்ததாகவும், பிரிட்டன் அரச குடும்பத்துக்குள் பூசல்கள் நிலவுவதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஹாரியும் அவரது மனைவி மேகனும் தாங்கள் வகித்து வந்த அரச குடும்பத்தின் முதன்மை உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தை கைவிடுவதாக இணையதள வாயிலாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர்.
இளவரசரின் இந்த அறிவிப்பு பிரிட்டன் அரசக் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க பிரிட்டன் அரசி எலிசபெத் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தில், இனி அரண்மனை நிகழ்வுகளில் ஹாரிக்கும், மேகனுக்கும் எத்தகைய பங்கு அளிப்பது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Comment

Successfully posted