ஒரே இரவில் நடந்த கொடூரம்!!

Sep 18, 2021 03:36 PM 1408

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் காதலனை சந்திக்க சென்ற 14 வயது சிறுமி ஒரே இரவில் 25 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புனேவை சேர்ந்த சிறுமி அவள். வயது 14. 9 ம் வகுப்பு படிக்கும் அவளை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, திருமணம் செய்து கொள்ள மும்பை வருமாறு அழைத்துள்ளான் அவளின் சக தோழன் ஒருவன். அவன் மீது கொண்ட ஈர்ப்பு, அவளை பையும், கையுமாக புனே ரயில் நிலையத்தில் நிறுத்தியது. 

வீட்டில் டியூசன் செல்வதாக கூறி விட்டு வெளியேறியவள், தண்டவாளங்களை வெறித்தபடி காத்திருந்தாள். அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், மும்பைக்கு மறுநாள் தான் ரயில் வரும் என்றும் இரவில் தங்க இடம் ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி அழைத்து சென்றுள்ளான்.

ஆளில்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்திய அவன், அங்கேயே வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அதன் பிறகு தனது கூட்டாளிகள் 8 க்கும் மேற்பட்டோரை போனில் அழைத்து சிறுமியை சீரழித்துள்ளான். பின் அனைவரும் அங்கிருந்த ஓட, அரை மயக்கத்தில் கிடந்த சிறுமியை அவ்வழியாக வந்த ரயில்வே ஊழியர்கள் சிலர் தங்கள் இடத்திற்கு தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

நள்ளிரவு கடந்தது. மிருகங்கள் கலைத்து வீடு திரும்ப சிறுமி மீண்டும் ரயில் நிலையம் வந்துள்ளாள். அப்போது அங்கு வந்த துப்புரவு பணியாளர் ஒருவர், நள்ளிரவுக்கு மேல் ரயில் நிலையத்தில் யாரும் தங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் சிறுமிக்கு சாப்பிட உணவும் வாங்கி தந்துள்ளார். இதனால் அவரை நம்பிய சிறுமி அவருடன் அவர் வீட்டிற்கு செல்ல அங்கு வைத்தும் அவள் சிதைக்கப்பட்டு அனுப்பப்பட்டாள். 

அதிகாலை ரயிலை பிடித்த சிறுமி மும்பையில் உள்ள தனது காதலனை சந்திக்க அவன் அவளை சண்டிகர் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இரவு முழுவதும் மகள் வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் கடந்த 5 ம் தேதி சண்டிகரில் இருந்த சிறுமியை மீட்டு புனே அழைத்து வந்தனர். மேலும் அவளின் காதலன், அவர்களுக்கு அறை அளித்த விடுதி மேலாளர் ஆகிய இருவரை கைது செய்தனர். பின் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 25 க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு இடங்களுக்கு சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஆட்டோ டிரைவர், துப்புரவு ஊழியர், ரயில்வே ஊழியர் என 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். தோழனை சந்திக்க சென்ற சிறுமி பல இடங்களுக்கு பல நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Comment

Successfully posted