கணவனே மனைவியை கொலை செய்த கொடூரம்!

Aug 22, 2020 10:21 PM 1500

திருச்சி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, மகனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கட்டிட தொழிலாளியை சோமரசம்பேட்டை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை, அல்லித்துறை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். கூலித் தொழிலாளியான இவர். குடிபழக்கத்திற்கு அடிமையானவர். இவருடைய மனைவி ராதிகா. இவர்களுக்கு கீர்த்திவாசன், தீபக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மாரியப்பன் ராதிகாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல் நேற்று இரவு குடிபோதையில் இருந்த மாரியப்பன் மீண்டும் ராதிகாவிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு மாரியப்பன் வீட்டிற்கு உள்ளேயும், ராதிகா தனது 8 வயது மகன் கீர்த்திவாசனுடன் வீட்டிற்கு வெளியேயும் உறங்கியுள்ளனர். இந்தநிலையில் இன்று காலை 7 மணி வரை ராதிகா மற்றும் அவரது மகன் கீர்த்திவாசன் ஆகியோர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் அருகில் சென்று பார்த்த பொழுது அவர்கள் தலையில் ரத்தக்காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இறந்து கிடந்த அவர்களின் அருகில் பெரிய கற்கள் கிடந்ததால் இருவரும் தலையில் கல்லை போட்டு கொலை செய்து இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர், விசாரணையில் மாரியப்பன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவார் என்பதும். மனைவியின் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது. மேலும் தப்பியோடிய மாரியப்பன் ஏற்கனவே, ஒரு கொலை சம்பவம் தொடர்பாக 10 வருடம் சிறை தண்டனை பெற்றவர் என்பதும், சிறையிலிருந்து வந்தபின் ராதிகாவை திருமணம் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கொலை செய்து தப்பி ஓடிய கணவன் மாரியப்பனை சோமரசம்பேட்டை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted