"தடுப்பூசி மையங்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

May 30, 2021 05:31 PM 995

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் லக்காபுரத்தில் கடந்த 27ம் தேதி நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் முன்கள பணியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

பக்கவாட்டு வழியாக திமுக பிரமுகர்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மட்டுமே தடுப்பூசி மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதால், முகாமிற்கு வெளியே நின்றிருந்த முன்கள பணியாளர்கள் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டு ஏமாற்றத்துடன் திரும்பியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் முன்கள பணியாளர்களை அலைக்கழிப்பதுடன் கொரோனா பரவல் அதிகரிக்கவும் வழிவகுப்பதாக அவர் குறைகூறியுள்ளார்.

ஒவ்வொரு பகுதியில் முன்னுரிமை பெற்றவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து காவல்துறையினரின் உதவியுடன், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Comment

Successfully posted