உச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து

Feb 19, 2020 09:20 PM 451

ஒவ்வொரு நாளும் உச்சநீதிமன்றத்திற்கு வரும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இடநெருக்கடி நிலவி வருகிறது. உச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 4 மற்றும் 5வது பிரிவின் படி உச்சநீதிமன்றம் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்நீதிமன்றம் தன்னுடைய முதல் அமர்வை 1950ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி துவங்கியது. இந்நிலையில் தற்போதுள்ள கட்டடத்திற்கு 1958ம் ஆண்டு  இடம்பெயர்ந்தது. இதன் மைய மண்டபம் நீதி வழங்கும் முகத்தோற்றத்தைக் கொண்டுள்ளது.  
 
1979 ல் இதனோடு கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு மண்டபங்கள் இணைக்கப்பட்டன. மைய மண்டபத்தில் தலைமை நீதிபதியின் வழக்காடு மன்றம் மிகப்பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. 1958ல் நீதிமன்றம் செயல்படத் துவங்கிய போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் 7 ஆக இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 16 ஆக அதிகரித்துள்ளது.

1960களில் நூற்றுக்கணக்கான வழக்குகள் மட்டுமே பதிவான இருந்த நிலையில் தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஒவ்வொரு வாரமும் சராசரியாக 1000 வழக்குகள் விசாரணைக்கு வருகின்றனஇதேபோல் வழக்கறிஞர்களின் எண்ணிக்கையும் 3000க்கும் மேலாக அதிகரித்துள்ளதால் கடுமையான இட நெருக்கடி நிலவுகிறது.  ஒவ்வொரு நாளும் வழக்கறிஞர், பொதுமக்கள், என ஏராளமானோர் உச்சநீதிமன்றத்திற்கு வந்து செல்கின்றனர்.

சமீபத்தில் வழக்கு ஒன்றில் வாதாடுவதற்கு வருகை தந்த அட்டானி ஜெனரல் கேகே வேணுகோபால் இந்த இட நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். மேலும் விசாரணைக்காக ஆஜராக வரும்பொழுது கூட்ட நெரிசலில் நுழைந்து வருவதற்கு பயமாக உள்ளது என்றும் வழக்கறிஞர்களை தள்ளி விட்டு வரக்கூடிய நிலைமை உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும்  நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிவது போன்று உச்சநீதிமன்றத்திற்கும் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இட நெருக்கடியைத் தவிர்க்க நாடு முழுவதும் உச்சநீதிமன்றத்தின் கிளைகளை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையும் நிலவி வருகிறது.  

Comment

Successfully posted