30 வருடங்களாக தனியார் கட்டிடத்தில் இயங்கிவரும் அருங்காட்சியகம்

Mar 16, 2019 10:17 AM 106

கடலூரில் 30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அரசு அருங்காட்சியகத்தை, அரசு கட்டிடத்திற்கு மாற்றக்கோரி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூரில் 1989ஆம் ஆண்டு அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில், சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் காலத்து தடயங்கள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிற்பங்கள், கற்சிலைகள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து பண்டைய கால ஆதிமனிதன் பயன்படுத்திய தாழிகள், மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வரலாற்றை எடுத்துரைக்கும் இந்த அரசு அருங்காட்சியகத்தின் தற்போதைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏனெனில், கடந்த 30 வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அரசு அருங்காட்சியகத்தில், இடப்பற்றாக்குறை காரணமாக, பல வகையான சிலைகள், சிற்பங்கள் ஆகியவை, நுழை வாயிலில் அங்கும் இங்குமாக வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ள இந்த அருங்காட்சியகத்தை, அரசுக்கு சொந்தமான இடத்தில் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், பல வரலாற்று சான்றுகளை எடுத்துரைக்கும் விதமாக இங்கு வைக்கப்பட்டுளள சிற்பங்கள், வரும் தலைமுறையினருக்கு தெரியாத வகையில் அழிந்து விடும் எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சீரமைத்து, அதனை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் எனவும், பள்ளிகள், கல்லூரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விளையாட்டரங்கம், மைதானம் உள்ளிட்டவை, இந்தக் கட்டிடத்திற்கு மிகவும் அருகாமையிலேயே உள்ளதால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் பொது மக்கள் சார்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted