ரஞ்சன் கோகாய்க்கு எதிரான புகார் : ஓய்வுபெற்ற நீதிபதி பட்நாயக் தலைமையில் குழு விசாரிக்கும்

Apr 25, 2019 03:36 PM 146

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் புகார் அளித்தார். இதனிடையே தலைமை நீதிபதியை பாலியல் புகாரில் சிக்க வைக்க சதி நடப்பதாகவும் அதற்காக தன்னிடம் சிலர் பேரம் பேசியதாகவும் கூறி வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்ஸ் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்வுக்கு எதிராக நடைபெறும் சதி குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாக் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. மேலும் இந்த குழுவுக்கு சிபிஐ இயக்குநர், உளவுப்பிரிவு தலைவர், டெல்லி காவல் ஆணையர் ஆகியோர் உதவ வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

Comment

Successfully posted