மதுரை கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு மீண்டும் தொடங்கியது!

May 20, 2020 09:57 PM 975

தமிழர் தம் பெருமையை உலகறியச் செய்யும் கீழடி அகழாய்வுகள், கொரோனா இடையூறைத் தாண்டி  மீண்டும் தொடங்கியது.

தமிழின் தொன்மை... தமிழர்களின் வரலாறு... தமிழகத்தின் சிறப்பு... என அத்தனைக்கும் முத்தாய்ப்பான சான்றுகளை அள்ளி வழங்கியது கீழடி அகழாய்வு. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலூகாவில் அமைந்துள்ள கீழடியில் தொடங்கிய அகழாய்வுக்கு இடையில் பல தடைகள் விழுந்தன. ஆனால், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் விடா முயற்சி காரணமாக, கீழடியில் விழுந்த தடைகள் தகர்க்கப்பட்டு, தமிழர் நாகரீகத்தின் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றும் அகழாய்வுகள் தொடர்ந்தன. முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள் இந்திய அரசின் தொல்லியல் துறை சார்பாக கீழடியில் நடைபெற்றன. அது நிறைவடைந்த நிலையில், நான்கு மற்றும் ஐந்தாம் கட்டப் பணிகள் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்று முடிந்தன. அதையடுத்து, ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்கியது. அதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும், ஆறாம் கட்ட அகழாய்வில் கீழடியோடு கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளும் கூடுதலாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

கொந்தகை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சங்க காலத்திற்கு முந்தைய முதுமக்கள்
தாழிகள் மற்றும் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. அது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், அகழாய்வுப் பணியும் நிறுத்தப்பட்டது. பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கீழடி அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட கொந்தகை, கீழடி, அகரம் ஆகிய பகுதிகளில் ஆறாம் கட்ட ஆய்வு பணிகள் மீண்டும் தொடங்கின. கீழடியைப் பொறுத்தமட்டில் மூன்று குழிகளில், புதிய சமூக இடைவெளியுடன் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தம் பதினெட்டு பணியாளர்களும் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அதேபோன்று கொந்தகை மற்றும் அகரம் ஆகிய பகுதிகளிலும் குறிப்பிட்ட அளவுப்
பணியாளர்கள் துணையுடன், தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் அனைத்தும் தமிழக தொல்லியல்துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் நடக்கிறது. தமிழக அரசின் உத்தரவுப்படி அனைவருக்கும் கை கழுவ கிருமி நாசினி வழங்கப்பட்டு, முகக்கவசங்களும் அளிக்கப்பட்டன.


இன்னும் ஒரு வாரத்தில் குழிகளுக்குள் தெரியத் தொடங்கி உள்ள பொருட்கள் முழுவதுமாக வெளியில் எடுக்கப்படும் அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனவின் இடையூறையும் தாண்டி, தமிழர் பெருமையை உலகறியச் செய்யும் கீழடி ஆய்வுகள் தொடங்கியது, உலகத் தமிழர்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comment

Successfully posted