கல்லூரிக்கு டிமிக்கி கொடுக்க பேய் கதை விட்ட மாணவன்!

Feb 09, 2021 10:42 AM 1914

ஹாலிவுட் படத்தில் வரும் CONJURING பேய், தன்னை டார்கெட் செய்து டார்ச்சர் தருவதாக கூறி, கல்லூரிக்கு டிமிக்கி கொடுத்து வந்த இளைஞர், பேயோட்டும் பெண்மணியிடம் வசமாக சிக்கி வைரலாகியுள்ளார்.

மதுரை மாவட்டம் ஊத்தங்குடியை இவர்தான்.... பேய்க்கதை பெரியசாமி.

பள்ளியில் பட்டாம் பூச்சியாய் சிறகடித்து திரிந்த நமது திகில் பாண்டிக்கு கல்லூரி வளாகம் கபசுர நீராய் கசந்துள்ளது. இதனால் வகுப்புகளுக்கு மட்டம் போட எண்ணிய அவர் CONJURING கதையை ரீமேக் செய்து வீட்டில் ரீலீஸ் செய்துள்ளார்.

பதறிய இளைஞனின் பெற்றோர் அவரை போயோட்டும் திருநங்கை மதுராவிடம் கூட்டிச் சென்றனர். அவரிடம் தனது கழுத்தை யாரோ பிடித்து நெரிப்பதாகவும், ஏதோ ஒரு உருவம் தனது கால்களை பிடித்து இழுப்பதாகவும் கேமரா இல்லாமலேயே படம் ஓட்டியுள்ளார் நம் வாழும் ராம நாராயணன்

பேச்சு கொடுத்த சில நிமிடங்களிலேயே திகில் பாண்டியின் சித்து வேலைகள் தெரியவர சிரித்தபடியே மிரட்டி அவரை வழிக்கு கொண்டு வந்தார் மதுரா.

அழாத குறையாக நின்றிருந்த திகில் பாண்டியை நோக்கி ”ஆபாச படம் பாப்பியா” என பேயோட்டி திடீரென அத்துமீற அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் ”அதெல்லாம் சகஜமா எல்லோருக்கும் பாக்குறதுதானே” என்று அதற்கு இளைஞர் அப்பாவியாய் கூற ஏறக்குறைய எல்லோருமே சிரித்து விட்டனர்.

”இனிமே பொய் சொல்லுவியா” என கம்பை எடுத்த மதுராவிற்கு தனது கடந்த காலம் நினைவு வந்திருக்க வேண்டும். உடனே தந்தையை அழைத்து தடியை கொடுத்தார். ஆனால் மகனை அடிக்க மனமில்லாமல் அவர் மருகியதை பார்க்கையில் “ அந்த அழகு தெய்வத்தின் மகனா” என்றுதான் தோன்றியது.

”இப்டியே பேசிட்டேஇருந்தா எப்படி? அடிச்சுக்காட்டு“ என பிரம்பை பிடுங்கி தாயிடம் கொடுத்தார் பேயோட்டி. எழுந்தவர், 3 வருட கோபத்தையும் பிரம்பில் இறக்கி மகனை வெளுத்து எடுத்தார்.

3 ஆண்டுகள் கல்லூரிக்கு செல்லாமல் சுதந்திரமாய் குட்டிச் சுவரில் குந்தியிருந்த இந்த இலவு காத்த கிளி, நொடிப்பொழுதில் தனது பொய் முட்டைகள் நொறுக்கப்பட்டதால் சோகத்தில் மூழ்கியது. இனி கொஞ்ச நேரம் இங்கிருந்தால் றெக்கைகளும் பறிபோகும் என்று நினைத்ததோ ”கல்லூரிக்கு செல்வேன்” என சத்தியம் செய்து விட்டு கனியை வாங்கி கொண்டு நடையை கட்டியது.

Comment

Successfully posted