சந்தர்ப்பவாத அரசியல் ஸ்டாலினின் உண்மை முகம்

Apr 14, 2020 04:15 PM 2543

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு எந்தத் எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் நேர்மையான நோக்கத்தை மறைத்து  பேரிடர் காலத்திலும், சந்தர்ப்பவாத அரசியல் செய்ய நினைக்கிறார் மு.க.ஸ்டாலின்.  கொரோனா வைரஸ் அதன் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், உலக வல்லரசு நாடுகள் உருக்குலைந்து கிடக்கின்றன. உலகப் பேட்டைக்காரனான அமெரிக்காவின் ஆட்டம் அடங்கிப்போயிருக்கிறது. இத்தாலி, மீள முடியாத இக்கட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஸ்பெயினும், பிரான்சும் எதிர்காலம் தெரியாமல் திண்டாடி நிற்கின்றன. இப்படி, உலக வல்லரசுகளையே கதிகலங்க வைத்த கொரோனா வைரஸை, வளரும் நாடு என்ற நிலையிலேயே உள்ள இந்தியா, மிகச்சரியாக எதிர்கொண்டு சமாளித்து வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகம் கொரோனாவின் தாக்குதலை எதிர்கொண்டு தடுப்பதில், தொலைநோக்குப் பார்வையுடன், இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதல்படி, அவரது தலைமையில் செயல்படும் அமைச்சரவையும், அரசு அதிகாரிகளும்,  கொரோனா தாக்குதலில் இருந்து தமிழகத்தைக் காக்க, இரவு-பகல் பாராது உழைத்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி 5-ம் தேதியே தமிழக அரசு கொரோனாவுக்கு எதிரான போருக்கு வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டது. அந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பே, தமிழகத்தில் 6 நாட்கள் ஊரடங்கு என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததைக் குறிப்பிடலாம்.

கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்க, மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்த்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்பதால்தான், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டப்படியும், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் படியும், மத்திய அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் மத்திய அரசின் உத்தரவைக் கட்டிக் காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமை. இருந்தாலும், விதிவிலக்காக சில தளர்வுகளையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார்.

அதில் ஒன்றுதான், வீடின்றி சாலையோரங்களில் வாழ்ந்து வரும் ஆதரவற்றவர்களுக்கு கருணை உள்ளம் கொண்டோர் உதவி செய்வதை அனுமதிப்பது என்பது. அதனால்தான், ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், நல்ல உள்ளம் கொண்ட சிலர், ஆதரவற்றவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் அளிப்பதை, தமிழக அரசு இதுநாள் வரை தடுக்கவில்லை. அதேசமயத்தில், அப்படி உதவி செய்பவர்களின் பாதுகாப்பும், ஆரோக்கியமும் முக்கியம் என்பதையும் உணர்ந்து கொண்ட தமிழக அரசு, தற்போது அதில் சில கட்டுப்பாடுகளையும், வழிகாட்டுதல் முறைகளையும் அறிவித்துள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைக்கும் தன்னார்வலர்கள், சேவை நிறுவனங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்பதை திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ள தமிழக அரசு, உதவிகளை வழங்குவோர், வருவாய்த்துறை, காவல்துறை, மாநாகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும், உதவிகளை வழங்குவோர், தங்கள் வழங்கும் உதவிகள், யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கிறார்களோ... அவர்களுக்கே போய்ச் சேரும் வகையில் வழிகாட்டுதல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாற்றமும் அறிவிப்பும், முழுக்க முழுக்க மக்களின் நலனையும், உணவு வழங்கி உதவ நினைப்பவர்களின் நலனையும் கருத்திக் கொண்டு செய்யப்பட்டதே!

தமிழக அரசின் இந்த நல்ல நோக்கத்தை உணராமலோ... அல்லது உணர்ந்து கொண்டே உணராததைப்போல சில எதிர்கட்சிகள் நடித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தமது தந்தை கருணாநிதி வழியில், எப்போதும் தீய அரசியல் செய்வதற்கே பழகிப்போன தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த இக்கட்டான நேரத்திலும், தீய அரசியல் செய்து ஆதாயம் தேடப்பார்க்கிறார். அதனால்தான், தமிழக அரசின் நடவடிக்கைகள், திட்டங்களில் உருப்படியாக குற்றம் காண முடியாத மு.க.ஸ்டாலின், அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களை தமிழக அரசின் மீதும், முதலமைச்சர் எடப்பாடியின் மீதும் கூறி வருகிறார். ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இந்த நேரத்தில், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் சட்டவிரோத  அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை,  தமிழக ஆளுனர் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரை அனைவரும் பாராட்டி உள்ளனர். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின், எப்படியாவது தமிழக முதலமைச்சர் மீதும் சேற்றை வாரி இறைத்து, மக்கள் மனதில் அவரது மதிப்பைக் குறைக்க நினைக்கிறார். ஆனால், தன்னலம் கருதாத தமது உழைப்பின் மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மென்மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறார் என்பதுதான் எதார்த்தம்.

Comment

Successfully posted