மகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு

Jul 24, 2021 03:52 PM 1855

மகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரித்துள்ளது. 120க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராய்கட், கோலாப்பூர், தானே, பால்கர், ரத்னகிரி மற்றும் நாக்பூர் மாவட்டங்களில் பெய்த கனமழை, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், ராய்கட் மிகவும் அதிகமான பாதிப்புகளைக் கண்டது.

தொடர் மழையால், நேற்று முன்தினம் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடலோர மாவட்டமான ராய்கட்டில், மகாத் தெஹ்சில் மற்றும் அதனைச் சுற்றி நிலச்சரிவு ஏற்பட்டது.

மலையின் ஒரு பகுதி சரிந்து, அருகே இருந்த தலியே கிராமத்தின் மீது சரிந்தது. இதில், 35 வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படும் 120க்கும் மேற்பட்டோரை மீட்கும் முயற்சியில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில், வெள்ளப்பெருக்கு காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

சாங்கிலி மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டு, 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

பால், மளிகை உள்ளிட்ட இன்றிமையாத பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை என்றும் செல்போனில் டவர் கிடைக்காததால், அவசர தேவைக்குகூட உறவினர்களை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

Comment

Successfully posted