குறுக்கு வழியில் அரசு பணிக்கு முயன்றவர்கள் வேதனை!!

Jun 01, 2020 02:21 PM 2049

ராமநாதபுரம் புளிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் டெய்ஸி. நீண்ட நாட்களாக அரசு வேலைக்கு முயற்சித்து வந்த தனது மருமகனுக்கு, எப்படியாவது வேலையை பெற்றுத் தர வேண்டும் என தீர்மானித்துள்ளார்.அரசு வேலைக்காக பணம் கொடுக்கவும் தயாராக இருந்த அவர், ஜார்ஜ் பிலிப் என்ற ஏமாற்றுப் பேர்வழியின் வலையில் சிக்கியுள்ளார். தனது நண்பர்,  டிஎன்பிஎஸ்சியில் உயர் பதவியில் இருப்பதாகவும் அவர் மூலம் எளிதில் அரசு வேலை பெற்றுத் தருவேன் என்று கூறிய ஜார்ஜ் பிலிப் அதற்காக பணம் செலவு செய்ய வேண்டும் என தனது நஞ்சக வலையை விரித்துள்ளார்.

ஜார்ஜ் பிலிப்பின் பேச்சை உண்மையென நம்பிய டெய்சி உள்பட 3 பேர், சுமார் 15 லட்ச ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளனர். பணத்தைக் கொடுத்து விட்டு, பணி நியமன ஆணையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனால் அச்சமடைந்த  டெய்சி, ஜார்ஜ் பிலிப்பை அணுகியுள்ளார். 15 லட்ச ரூபாய் பணத்தையும், டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றும் பிரகாஷ் என்ற நாவப்பனிடம் கொடுத்து விட்டதாகவும், எதுவாக இருந்தாலும் அவரிடம் சென்று கேட்டுக் கொள்ளுங்கள் என்று திமிராக பதிலளித்துள்ளார் ஜார்ஜ் பிலிப்.இதில் சந்தேகமடைந்த டெய்ஸி, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தான், ஜார்ஜ் பிலிப்பும், நாவப்பனும் ஏமாற்றுக்காரர்கள் என்பதும், பல பேரை இது போன்று ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது.

பிரகாஷ், டிஎன்பிஎஸ்சி அரசு துணை செயலர் என்ற பெயரிலும், நாவப்பன் எரிசக்தி துறை என்ற மற்றொரு பெயரிலும் போலி லெட்டர் பேடுகளை தயாரித்து வைத்துள்ள நாவப்பன், அதை வைத்து ஊரில் வலம் வந்துள்ளனர். மேலும் முன்னணி திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற  போட்டோக்களையும் வைத்துக் கொண்டு பலரை ஏமாற்றி வந்துள்ளார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல்வேறு அரசுத் துறைகளுக்கும், நாவப்பன் தனது லெட்டர்பேடில்  பரிந்துரைக் கடிதங்கள் அனுப்பியதும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதும் தெரிய வந்தது. நாவப்பன் ஏற்கனவே பல பேரை ஏமாற்றி, லட்சக்கணக்கில் சம்பாதித்ததாக தெரிவிக்கும் காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த நாவப்பன் மீண்டும் பழைய ஏமாற்று வேலைக்கு திரும்பியுள்ளதும் தெரிய வந்தது.

எப்படியாவது அரசு வேலை பெற வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் முயற்சிப்பவர்கள் இருக்கும் வரை, பொய்யையும், புரட்டையும் மூலதனமாக கொண்டு செயல்படுவர்களும் முளைத்துக் கொண்டே தான் இருப்பார்கள். அரசு வேலைக்காக பணத்தை செலவழிக்க தயாராக இருப்பவர்கள், டெய்சி போன்றவர்களை பார்த்தாவது திருந்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Comment

Successfully posted