செங்கல்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது

Dec 12, 2019 09:58 PM 493

செங்கல்பட்டு அருகே வழிப்பறி மற்றும் பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்த போலி செய்தியாளர்கள் 3 பேரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உதயசங்கர் என்பவர் லாரியில் பொருட்களை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது லாரி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகேந்திரா சிட்டி அருகே பஞ்சர் ஆனது. இதையடுத்து அங்கிருந்த பஞ்சர் கடையில் லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது காரில் வந்த மூன்று பேர், செய்தியாளர்கள் என்று சொல்லி உள்ளனர். பஞ்சர் கடையில் டயர் திருட வந்ததாக, ரகசிய தகவல் கிடைத்ததாகவும், பணம் கொடுத்தால் விட்டுவிடுவதாகவும் லாரி ஓட்டுனர் உதயசங்கரை மிரட்டி உள்ளனர். லாரி ஓட்டுனரை தாக்கி பணம் பறித்த போது அங்கு, ரோந்து வந்த காவல்துறையினர் அவர்ளை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த மூன்று பேரும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, காவலர்களின் வாகன கண்ணாடியை உடைத்து தகராறு செய்தனர். விசாரணையில், மூன்று பேரில் கோமலாபதி என்பவர் மட்டும் புலனாய்வு மாத இதழ் ஒன்றில், 2017 வரை செய்தியாளராக வேலை பார்த்தது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும், காரில் சென்று பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Comment

Successfully posted