தேர்தலையொட்டி வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம்

Mar 25, 2019 03:28 PM 282

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது.

தமிழகத்தில் மக்களவை, மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சைகள் என பலரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இதுவரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட 254 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 218 ஆண்களும், 35 பெண்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்.

இதேபோன்று, 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 72 வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுத்தாக்கலுக்கு நாளை கடைசி நாளாகும். மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் போட்டியிட தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 27-இல் நடைபெறவுள்ளது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். 29-ஆம் தேதி மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

Comment

Successfully posted