தமிழகத்தில் காய்கறி, மளிகைக் கடை, பெட்ரோல் பங்குகளுக்கு நாளை முதல் நேரக் கட்டுப்பாடு

Mar 28, 2020 09:01 AM 16206

தமிழகத்தில் நாளை முதல் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் இரண்டரை மணி வரை மட்டுமே செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேறி வருவதால் நோய் தொற்று பரவாமல் தடுக்க கடைகள், பெட்ரோல் நிலையங்கள் திறந்திருக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி அங்காடி மற்றும் பிற காய்கறி விற்பனை கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் இரண்டரை மணி வரை மட்டுமே திறந்திருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் இரண்டரை மணி வரை மட்டுமே செயல்படுமென்றும், அரசு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கான பிரத்யேக பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே நாள் முழுவதும் செயல்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், உணவகங்களில் பார்சல் மட்டும் நாள் முழுவதும் தொடர்ந்து செயல்படுமென்றும், வயது முதிர்ந்தோர், வீட்டில் சமைக்க இயலாதோர், சமைத்த உணவுகளை வீட்டிற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களின் நலன் கருதி சுவிகி, உபர் ஈட்ஸ் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மதியம் 12 முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 9 மணி வரையும் உணவு எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி மற்றும் பழ சந்தைகளுக்கு வரும் வாகனங்களில் இருந்து மாலை 6 மணி முதல் காலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி வைத்திட வேண்டுமெனவும், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தல், சுமை தூக்கும் தொழிலாளிகள் பாதுகாப்பு சுகாதார நடவடிக்கையை கடைப்பிடித்தலை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட ஆட்சியர்களும் குழு அமைத்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்கள் சமைத்த உணவுகளை வழங்க வேண்டாமெனவும், உணவு தயாரிக்க தேவைப்படும் பொருட்களை சென்னை மாநகராட்சி ஆணையரிடமோ, பிற மாவட்ட ஆட்சியர்களிடமே வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வழங்க விரும்புவோர் அந்தந்த மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறப்பு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல் பார்த்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்த நபர்கள், தங்களை தாங்களே கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted