
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க... ஈடு இணையற்ற... சங்க இலக்கியப் படைப்புகள் இன்றைக்கும் நம்மால் வாசிக்க முடிகிறது என்றால், அதற்கு அடிகோலியவர், தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் அறியப்படும் உ.வே சாமிநாதன். அவரது பிறந்த தினம் இன்று....
கும்பகோணத்துக்கு அருகே உள்ள, உத்தமதானபுரம் எனும் சிற்றூரில், 1855ம் ஆண்டு பிறந்த உ.வே.சாமிநாதன் என்கிற இயற்பெயர் கொண்ட உவேசா, தொடக்கத்தில் கும்பகோணத்தில் இருந்த கல்லூரியிலும், அதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார். தனது சிறுவயதில் இருந்தே தமிழின் இலக்கணம், இலக்கியம், செய்யுள் ஆகியவைகளை அறிந்துகொள்வதிலும், இயற்றுவதிலும் தன்னிகரற்று திகழ்ந்தார்.
தமிழின் தொன்மைக்கும் உண்மைக்கும் உ.வே.சாவின் தீவிரமான தேடுதலில் விளைந்த படைப்புகளே ஆதாரங்களாக நம்முன் பரந்து கிடக்கின்றன.
சங்க இலக்கியமான சீவகசிந்தாமணியை தேடிப்பிடித்து புதுப்பிக்க முடிவு செய்த உ.வே.சா, அதற்கான குறிப்புகளைத் தேடி சேகரித்து சரிபார்த்துக் கொண்டிருந்த போது, பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார். அதனை மீறி சீவகசிந்தாமணியையும், அதனைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மதுரைக்காஞ்சி, பொருநாராற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைப்படுகடாம் போன்ற சங்க இலக்கிய நூல்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நூல்களை கண்டறிந்து அவைகளை புதுப்பித்தார்.
மணிமேகலை நூலுக்கு உ.வே.சா எழுதிய உரை, இன்றளவும் மட்டுமின்றி என்றளவும் சங்க இலக்கிய நூல்களில் சிறந்த உரை நூலாக கொண்டாடப்பட வேண்டியது. தன் வாழ்நாள் முழுவதும் ஓலைச்சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் தேடி தேடி சேகரித்து பொக்கிஷங்களாக பாதுகாத்தார் அவர். சிறந்த ஆசிரியர்களுள் தலைசிறந்தவர் என்பதை குறிக்கும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் அவருக்கு ”மகாமகோபாத்தியாய்” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.
இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற உ.வே.சா, கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறனையும் தேன்போல நிரம்பக் கொண்டிருந்தார். அதற்கு அவர் எழுதிய பல கடிதங்களே சாட்சியாகின்றன. சங்க இலக்கியங்களை பல்வேறு ஓலைச்சுவடிகளில் இருந்து அச்சுப் பிரதிக்கு உருமாற்றிய, உ.வே.சாவின் பிறந்த தினமான இன்று, அதனை நவீனமான டிஜிட்டல் யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை, இளம் தலைமுறையினர் உணர வேண்டும்.
Successfully posted