இயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று!

Jul 31, 2020 05:17 PM 3815

ஒரு இயக்குநர் ஒரு குறிப்பிட்ட ஜானரில் சிறந்தவராக இருக்கலாம். ஆனால் எல்லா ஜானர் திரைப்படங்களிலும் சிறந்த இயக்குநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

மணிவண்ணன் என்ற பெயரைக் கேட்டாலே நக்கலும் நையாண்டியும்தான் நினைவுக்கு வரும். அவரின் இயல்பான நையாண்டிப் பேச்சின் மூலம் சமகால அரசியலை சாமான்யனுக்கும் புரியும்படி எளிமையாகப் பேசிய அற்புத இயக்குநர்.

பாரதிராஜாவின் திரைமொழியால் பெரிதும் கவரப்பட்டு அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்த மணிவண்ணன், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக் உள்ளிட்ட திரைப்பட்ங்களுக்கு கதை வசனத்தில் பங்களிப்பு செய்த பிறகு கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படம் மூலம் இயக்குநரானார். பாரதிராஜா திரைப்படங்களுக்கும், மனோபாலா இயக்கிய படங்களுக்கும் கதை எழுதிய மணிவண்ணன் அவரின் முதல் படத்திற்கு எழுதவில்லை. கலைமணி எழுதிய கதையைத்தான் இயக்கினார்.

கோவை மாவட்டம் சூளூரில் பிறந்த மணிவண்ணனுக்கு கல்லூரியில் கிடைத்த  நண்பர் சத்தியராஜ். அன்று தொடங்கிய அந்த நையாண்டி நட்பு திரைத்துறையிலும் தொடர்ந்தது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் அமைதிப்படை திரைப்படம். அத்திரைப்படத்தில் அமாவாசையாகவும் மணியாகவும் அவர்களைத்தவிற வேறு நடிகர்களை கற்பனை செய்து பார்க்கவே முடியாது என்றே சொல்லலாம்.

90 களிலும் 2000 ஆயிரத்தின் துவக்கத்திலும் மணிவண்ணன் இல்லாத படமே இல்லை என்று சொல்லுமளவிற்கு குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர், வில்லன் என நடித்துக்கொண்டிருந்தார் மணிவண்ணன். சங்கமத்தில் நாட்டியமாடியது, சூர்ய வம்சத்தில் சின்ராசின் நண்பராக இருந்தது, காதலர் தினத்தில் ராஜாவின் கதையைக் கேட்கும் பயணி, முதல்வனில் முதலமைச்சரின் உதவியாளர் ப்ளஸ் அரசியல்வாதி என அவரின் நடிப்புப் பற்றிப் பேச ஓர்நாள் போதாது. சகலகலா வல்லவரான மணிவண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Comment

Successfully posted