எழுத்தாளர் சாண்டில்யனின் 34-ம் ஆண்டு நினைவு தினம் இன்று...

Sep 11, 2021 01:28 PM 2961

வரலாற்று புதினங்களை வளமைத் தமிழுக்கு அளித்த வள்ளல் எழுத்தாளர் சாண்டில்யனின் 34-ம் ஆண்டு நினைவு தினம் இன்று... வரலாற்றோடு நீங்காத இடம்பிடித்த, அந்த எழுத்துச் சிற்பியை நினைவுகூர்கிறது இந்தச் செய்திக் குறிப்பு...

தமிழில் வரலாற்றுப் புதினங்களை விரும்பும் வாசகர்கள் கடக்க முடியாத சரித்திரப் பெயர் சாண்டில்யன். மயிலாடுதுறையில் பிறந்த இந்த மலர்த்தமிழின் இயற்பெயர் பாஷ்யம் ஐயங்கார் ஆகும். அறிஞர் சுவாமிநாத சர்மா, எழுத்தாளர் கல்கி ஆகியோரின் சமகால எழுத்தாளரான சாண்டில்யன், இந்த நண்பர்களின் வற்புறுத்தலாலேயே முதல் சிறுகதை எழுதினார். பின்னர், அவர்களே வியக்கும் வகையில், எழுதிக் குவித்த இமயமாக ஒளிர்ந்தார்.

நிகழ்வுகளின் மீது சாண்டில்யனுக்கு இருந்த ஆர்வம், அவரை வரலாற்றுப் புதினங்களை எழுத வைத்தது. தமிழ் எழுத்துலக வரலாற்றிலேயே, அதிகம் எழுதி வரலாறு படைத்த வரலாற்று நாயகன் சாண்டில்யன். அவர், கடல்புறா தந்த கதைப்புறா, யவன ராணியை ரசிகர்கள் முன்பு நடக்கவிட்ட கனவு ராஜா, பல்லவ திலகத்தைப் படம்பிடித்துக் காட்டிய சொல்வலத் திலகம். சாண்டில்யனின் இளமைச் சிந்தனையும் ருசிகர எழுத்தும் அவருக்குப் பாராட்டுகளையும், சர்ச்சைகளையும் சமமாகச் சேர்த்தன.

சேரன் செல்வியின் கவர்ந்த கண்களை, சித்தரஞ்சனியின் மோகினி வனத்தை, இந்திர குமாரியின் நீள் விழிகளை, இளைய ராணியின் வசந்த காலங்களைச் சாண்டியல்யன் எழுத்தின் வழி தரிசித்த தமிழ் ரசிகர்கள் - பாக்கியவான்கள்.

தீவிரமான எழுத்தாளராகவும், தீர்க்கமான பத்திரிகையாளராகவும் திகழந்த சாண்டியல்யன், தனது துறையில் பல புதுமைகளைச் செய்தார். தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுதியவர், திரைக் காவலராக ஒருமுறை ராஜாஜிக்கு எதிராகவும் கட்டுரை வாளைச் சுழற்றினார். சினிமா வளர்ந்த கதை என்ற புத்தகம் மூலம் திரைக்கலை வளர்ந்த வரலாற்றைப் பதிவு செய்தார்.

சாண்டில்யன், சாகா வரமுள்ள சகாப்தம் என்பதற்கு, நூற்றாண்டுகளைக் கடந்து, இன்றும் புத்தகக் கண்காட்சிகளில் விற்றுத்தீரும் அவரது படைப்புகளே சான்று எனலாம்...

நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி...

 

Comment

Successfully posted