யுவன் சங்கர் ராஜாவின் 42-வது பிறந்ததினம் இன்று...

Aug 31, 2021 08:42 AM 1293

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராகவும், இளைஞர்களின் உத்வேகமாகவும், கடந்த 24 ஆண்டுகளாக இசை ஆட்சி செய்துவரும் யுவன் சங்கர் ராஜாவின் 42வது பிறந்ததினம் இன்று.

1979ம் ஆண்டு இசைஞானி இளையராஜாவின் இரண்டாவது இசை வித்தாக பிறந்த யுவன், ஈரேழு ஆண்டுகளிலேயே இசையின் 7 ஸ்வரங்களையும் தன் உயிர் மூச்சாக உள்ளிழுத்துக்கொண்டார். அரவிந்தன் படம் மூலம், 18ம் வயதிலேயே இளம் இசையமைப்பளராக மெட்டமைக்கத் துவங்கிய அவர், இன்றும் அதே இளமை துள்ளலுடன் பண்ணிசைக்கிறார். இசையின் முதல் படிமம்-ஆன காதலை, பாடல்களாக வடிவமைப்பதில் யுவனை ஜூனியர் மேஸ்ட்ரோ என்றே அறுதியிட்டுக் கூறலாம்.

இசையுலகின் மூம்மூர்த்திகள் யார் யாரென்று ரசிகர்கள் தீர்மானித்துவிட்ட காலத்துக்குப் பின்னால் இசைக்க வந்த யுவன், தனக்கென வேறொரு இசை யுகத்தை தகவமைத்துக்கொண்டார். இளையராஜாவிடம் இருந்து செவ்வியலான இசை மரபையும்,.. ஏ.ஆர்.ரஹ்மானின் துல்லியமான இசைப் புதுமையையும்.... ஒரே கோப்பையில் வடித்து அதனை புனித திராட்சை ரசமாக்கி இசை விருந்துப் படைத்தார்.

யுவனின் பாடல்கள் தான் இளமையும் புதுமையும் என்றால், அவரது பின்னணி இசைக்கோர்ப்பு, துயிலெழுப்பும் தூரிகையாக ரசிகர்களின் ஆன்மாவை கரைத்துவிடும், சமயங்களில் துயரங்களில் இருந்து நம்மை கரைக்கும் கொண்டு சேர்த்துவிடும்.

தேன் தடவிய குத்தூசியைப் போன்ற யுவனின் குரலும், அவர் லயித்துப் பாடும் மென்மையும், பாடலையும், அதன் வரிகளையும் கடல் அலையை முத்தமிடும் மேகத்தைப் போன்ற உணர்வுகளுக்குள் புகுத்திவிடும் தொன்மையுடையது,

இசையின் புதுமையில் உச்சம் பல தொட்டாலும், மக்களின் மண்ணிசையையும் யுவன் விட்டுவைக்கவில்லை. அவர் கொஞ்சம் இறங்கி அடித்தால், புழுதியையும் தனக்கு பூமாலையாகச் சூடிக் கொள்வார்.

இளைஞனாக இசையுலகில் தடம் பதித்த யுவன், இன்றளவும் இளம் புயலாகவே இசை ரசிகர்களை சுழன்றடித்துக் கொண்டிருக்கிறார், இதே வளத்துடன் இன்னும் வானுயர கொடிகட்டி பறக்க, இதயம் கனிந்து இசை வாழ்த்துப் பொழிகிறது உங்கள் நியூஸ் ஜெ.

- நியூஸ் ஜெ செய்திகளுக்காக அப்துல் ரஹ்மான்

 

Comment

Successfully posted