பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினம் இன்று...

Feb 03, 2021 05:22 PM 1008

மொழி பிழைத்தால்தான் இனம் பிழைக்கும், நாமும் தலைநிமிர்ந்து வாழ முடியும் என, தமிழ்ச் சமூகத்தை கிளர்ந்தெழச் செய்த, தன்னிரகற்ற தமிழினத் தலைவன் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று.

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை என்ற இயற்பெயருடைய அண்ணா, 1909ம் ஆண்டு சின்ன காஞ்சிபுரத்தில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே தமிழ், ஆங்கிலம் மொழிகளில் அதீத புலமைப் பெற்றிருந்த அண்ணா, பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்; சமூகத்தில் புரையோடிக் கிடந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு, சமூக சீர்த்திருத்தக் கருத்துகளைப் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார். அங்கிருந்தே, அண்ணாவின் அரசியல் வாழ்க்கையும் சுடர்விடத் துவங்கியது.

என்றைக்குமே உற்றுநோக்கும் பேசுபொருளான, இந்தி எதிப்பு போராட்டத்தில் பேரறிஞர் அண்ணாவிற்கும் பெரும் பங்கு இருந்தது.

“இந்தி விலங்கினை ஒழித்திட வீரனே விரைந்து வா, தமிழ் அழிக்கும் ஆதிக்கம் இனியும் நீடிப்பதா?. மொழியைக் காக்கவும் நாட்டை மீட்கவும் விரைந்து வாரீர்!.”

என தனது பேச்சின் வாயிலாக மக்களிடையே தீரா எழுச்சியை உருவாக்கினார் அவர்.

தேசியக் கட்சிகள் திராவிட மண்ணில் இருந்து வேரறுக்கப்பட, வீசப்பட்ட முதல் சாட்டை அண்ணாவுடையதாக இருந்தது. அதன்பிடி இன்றளவும் தளரவில்லை என்பதே, அண்ணாவால் கட்டமைக்கப்பட்ட திராவிடத்தின் வெற்றியாகும். 1967ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை அதிகாரத்தில் இருந்து அகற்றியதோடு, அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் பதவியேற்றார் பேரறிஞர் அண்ணா.

தனது அரசியல் நெடும்பாதையில் அவர் முழங்கிய கொள்கைகளுக்கு, முதலமைச்சராக பதவியேற்றதுமே செயல் வடிவம் கொடுத்தார் அண்ணா. சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது, இருமொழிச் சட்டங்களை உருவாக்கி, முந்தைய அரசின் மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாக முடக்கியது. இவைகளுக்கும் மேலாக, மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை, தமிழ்நாடு எனப் பெயர் மாற்றி, தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றது என, தன்னிகரற்ற தமிழ்த் தலைவனாக பேரு பெற்றார்.

தமிழில் அடுக்கு மொழியில் மிகவும் நாகரிகமான முறையில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பேச்சாற்றல் கொண்ட அண்ணா, இலக்கியம், மேடை நாடகம், சினிமா என பண்பட்ட பன்முக மேதையாகவும் விளங்கினார்.

முதலமைச்சராக பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில், 1969ஆம் ஆண்டு இதே நாளில் இவ்வுலகை விட்டு அண்ணா மறைந்தாலும், தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பெரும் தொண்டுகளால் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

“நெஞ்சிலே வலுவிருப்பின்
வெற்றி தஞ்சமென்று
உரைத்துவந்து நம்மிடம்
கொஞ்சிடுவது உறுதி”

என்று உரைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு தினம் இன்று.....

 

Comment

Successfully posted