வார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று!!

Jul 18, 2020 06:14 PM 4157

வார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று. அவரைப் பற்றிய சிறப்புத் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என இரண்டு எழுத்தோவியர்கள் தமிழ் திரையிசைப் பாடல்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, தன் வார்த்தை விளையாட்டுக்களால் புது ரூட் போட்டவர் கவிஞர் வாலி.

திருச்சி அகில இந்திய வானொலியில் நாடகங்கள் இயற்றிக்கொண்டிருந்த வாலி, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பாடலை எழுதி டிஎம்எஸ்ஸுக்கு அனுப்பியதன் மூலம் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். தன்னுடைய செல்வங்கள், புகழ் அனைத்தும் எம். எஸ்.விஸ்வநாதன் என்ற மாமனிதன் இட்ட பிச்சை என்று சொல்லும் வாலி, " விஸ்வநாதனை சந்திக்கும் முன்பு எனக்கு திங்க சோறு இல்லை. அவரை சந்தித்தபிறகு சோறு திங்க நேரமில்லை" என்றார்.

Current affairs ஐ follow செய்ததால்தான் current இல்லாமல் மின்வெட்டில் தமிழகம் இருந்த நிலையை குறிப்பிடும் வகையில் 'மின்வெட்டு நாளில் மின்சாரம் போல வந்தாயே" என்று பாடல் எழுதினார். நாகேஷ் நடித்த எதிர்நீச்சலுக்கு பாட்டெழுதிய வாலி 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டே இருந்ததனால்தான் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்திலும் " எதிர்நீச்சலடி.." என்று எழுதினார்.

வாலியின் மேடைப் பேச்சுக்கள், எழுத்துக்கள், பாடல்கள் காற்றின் துகளைப்போல் எந்த பெட்டகத்திலும் அடக்க முடியாத இலக்கியச் செறிவு கொண்டவை. வாலி அறிமுகமானபோது கண்ணதாசனுக்கு இருந்த செல்வாக்கினால் வாலி எழுதிய பலப் பாடல்களை பலரும் அவை கண்ணதாசனால் எழுதப்பட்டதென்றே நினைத்தனர்.

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பத்மஸ்ரீ வாலி, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி உயிரிழந்தார். " எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். அழகான கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டான்" என்று  கண்ணதாசனுக்கு இரங்கல் கவிதை வாசித்த வாலி ஒரு அற்புதக் கமர்ஷியல் கவிதை என்பதில் ஐயமில்லை.

Comment

Successfully posted