எழுத்தாளர் அசோகமித்திரனின் 90-வது பிறந்த நாள் இன்று...

Sep 22, 2021 07:47 AM 1728

கண்ணிய எழுத்துக்கும் யதார்த்த நடைக்கும் சொந்தக்காரரான எழுத்தாளர் அசோகமித்திரனின் 90-வது பிறந்தநாள் இன்று...  அவரது புனைவுகளில் இழையோடும் அழகுகளைப், புரட்டிப் பார்க்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...

சுந்தரத் தெலுங்கு பேசும் ஆந்திர பிரதேசம், தமிழுக்குத் தந்த அற்புத கதை இயந்திரம் - அசோகமித்திரன். தியாகராஜன் என்ற அந்த தமிழ்ப் பற்றாளரை, உலகம் அறிந்தது அசோகமித்திரன் என்றுதான். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் இழையோடும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அசோகமித்திரன், தமிழ் இலக்கியத்துக்கு உலக மேடைகளில் அங்கீகாரம் தந்த எழுத்தாளார் ஆவார்.

ஜெமினி ஸ்டூடியோசில் கணக்கராக வேலை பார்த்துக்கொண்டு கதைக் கனவு கண்டவர் அசோகமித்திரன். பின்னர் முழுநேர எழுத்தாளராகி, ஏறத்தாழ 200 சிறுகதைகள், 9 நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் என்று எழுதிக் குவித்த இமயம். யதார்த்த தன்மை நிறைந்த புனைவுகளே அசோகமித்திரனின் பாணி எனலாம். எந்தவொரு ஆடம்பரமும் இல்லாத மொழிநடைக்கு சொந்தக்காரர் இவர்.

கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றிய அசோகமித்திரன், சென்னையின் தெருக்களைப் பற்றி எழுதிய கட்டுரை, இன்றளவும் சிறந்த ஆவணமாகத் திகழ்கிறது. நாம் சாலைகளில் எளிதில் கடந்து போகும் சாதாரண மக்களை, தம் கதைகள் மூலம் படம்பிடித்துக் காட்டிய சாமர்த்தியவாதி - அசோகமித்திரன்.

ஜெமினியில் பணி செய்த அனுபவங்களைக் கொண்டு அசோகமித்திரன் எழுதிய கரைந்த நிழல்கள் என்ற நாவல், திரைத்துறையின் பின்புல உலகத்தை, அதன் யதார்த்தம் மாறாமல் வெளிச்சமிட்டுக் காட்டியது. இவரது ‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற நாவல் இவருக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது. ‘அப்பாவின் சிநேகிதர்’, ‘தந்தைக்காக’ என்று தந்தையை மையமாக வைத்து இலக்கியம் செய்த ஈடில்லா எழுத்தாளர் - அசோகமித்திரன்.

‘இன்று; செப்டம்பர் 1984’, ‘ஆகாசத்தாமரை’, ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ உள்ளிட்ட நாவல்கள் மூலம், தமக்கென தனி ரசிகர் படையையே உருவாக்கிய, ஆர்ப்பாட்டம் இல்லாத அகத்துக்காரரான அசோகமித்திரனை, அன்றும், இன்றும், என்றும் வாசகர்கள் நெஞ்சில் வாசம் செய்யும் வித்தைக்காரர் எனலாம்.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி......

Comment

Successfully posted