மனித நேயத்துடன் வாழ்ந்து வருபவர்களை நினைவுகூரும் உலக மனிதநேய தினம் இன்று

Aug 19, 2019 01:39 PM 106

மனித நேயத்துடன் வாழ்ந்து வருபவர்களை நினைவுகூரும் வகையில் உலக மனிதநேய தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போதும் போர், குண்டுவெடிப்பு போன்றவற்றின் போதும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க, உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, வீடு, உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக நிற்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டச் சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் உதவுவார்கள். இதுபோன்று மனிதநேயத்துடன் செயல்பட்டு வருபவர்களின் சேவையை நன்றியுடன் நினைவு கூர்வதற்காக உருவாக்கப்பட்டதே 'உலக மனிதநேய தினம்'.

2003ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19ஆம் தேதி ஈராக்கில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கே செயல்படும் ஐ.நா உதவி தூதுக் குழுவைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு. கேனல் ஹோட்டல் என்ற இடத்தில் நடந்த அந்தத் தாக்குதலில், ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டெ மெல்லோ (Sergio Vieira de Mello) உட்பட மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

செர்ஜியோ, ஐ.நாவுக்காக 34 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர். அவர் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19ஆம் தேதியை, உலக மனித நேய தினமாகக் கடைப்பிடிக்க ஐ.நா சபை முடிவெடுத்தது. 2009ஆம் ஆண்டிலிருந்து இந்த தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பேரிடர் மற்றும் அசாதாரணச் சூழல்கள் நிலவும் போது மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் அனைவரும் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றித் தவிப்பவர்கள், தன் உறவினர்களிடம் இருந்து தொலைந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் சாலையோரங்களிலும், கடற்கரையிலும், தெருமுனைகளிலும், நடைபாதைகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் மறுவாழ்வுக்காக மேற்கொள்ளும் முயற்சி எதிர்காலத்தில் ஏழைகள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் எனக் கூறுகிறார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து, முதலமைச்சரின் விருது பெற்ற இளைஞர் நவீன்குமார்.

Comment

Successfully posted