மென்மலர் ஏ.எம் ராஜாவின் நினைவு தினம் இன்று

Apr 08, 2021 06:53 AM 2454

நிகழ மறுத்த அற்புதம்.. நெஞ்சை உருக்கும் சொற்பதம்.. மெல்லிசையின் புதல்வன்.. மெட்டுகளின் தலைவன்.. இசை உலகம் சூட மறுத்த மென்மலர் ஏ.எம் ராஜாவின் நினைவு தினம் இன்று.

ஏ.எம் ராஜா.. காதல் பாடல்களின் ஆதாம்; கனிவை குழைத்து மனதை மேவும் கான கொற்றன். கரடுமுரடான கர்நாடக இசையே திரையிசையாக இருந்த காலத்தில் தென்றல் மெட்டுகளால் தென்னிந்தியாவை அசைத்து பார்த்தவர். கண்டசாலா, டி ஆர் மகாலிங்கம் என ஐம்பதுகளின் இசை வானில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் ஏஎம் ராஜா எனும் ஏகாந்த நிலவின் குளுமைக்கு எப்போதும் தனி இடம் உண்டு

ஏ.எம் ராஜாவின் இசை, உயிர் நிறைந்தது; உணர்வுகள் பொதிந்தது. எனவேதான் அது மனதிற்குள் மருகி கொண்டே இருக்கிறது. எவ்வளவு கடினமான மெட்டும் அந்த குரல் கடந்து வரும்போது பாலில் குழைத்த சோறாகி விடும். நாள் முழுக்க மனதிற்கும் தொண்டைக்கும் வழுக்கி கொண்டே இருக்கும். காதில் கேட்க நேர்ந்த அவரின் காதல் கீதத்தை முணுமுணுக்காமல் கடப்பதென்பது முனிவர்களால் கூட முடியாத காரியம்.

பெரிய முயற்சிகள் எதுவுமில்லை. ஏ.எம் ராஜாவின் திறமைக்கு வாய்ப்புகள் தானாகவே கதவை தட்டின.

1958 ல் முதல் படம்.. சோபா, பெரிய அளவில் சோபிக்க முடிய வில்லை. ஆனால் 1959 ல் வெளியான கல்யாண பரிசின் வெற்றி அவரை பாலிவுட் வரை கொண்டு சேர்த்தது. அடுத்தடுத்து வந்த தேன் நிலவு உள்ளிட்ட படங்கள் அவரின் இசைக்காகவே வெள்ளி விழா கண்டன.

எல்லா பாடகிகளிடமும் இசைக்குறிப்பை நீட்டும் ஏ.எம் ராஜா, ஜிக்கியிடம் மட்டும் இதயக் குறிப்பை நீட்டினார். இசையை போலவே இயல்பாக மலர்ந்தது அவர்களின் காதல். ஏ.எம் ராஜா தனியாக பாடிய பாடல்களை விட தம்பதியாக பாடிய பாடல்கள் தமிழக மக்களின் இதயம் தொட்டன. புரட்சித் தலைவியின் காரில் எப்போதும் இருக்கும் கேசட்டுகளில் ஏ.எம் ராஜாவின் இசை கோர்வையும் ஒன்று.

வளைந்து கொடுப்பதும், தயங்கி நிற்பதும் ஏ.எம் ராஜாவிற்கு வராத பண்புகளாக இருந்தன. எனவே இசை மேதைக்கு கட்டாய ஓய்வளித்தார்கள் தயாரிப்பாளார்கள். 10 ஆண்டுகள் மட்டுமே திரை உலகில் பவனி வந்த போதிலுல் திகட்டாத பல கானங்களை தந்து இன்று வரை இரவுகளை நனைத்து கொண்டிருக்கும் ஏ.எம் ராஜா உண்மையில் திரை உலகில் மலர்ந்த குறிஞ்சி மலர்தான்.

 

  

Comment

Successfully posted