டாப்-10 எம்.ஜி.ஆர் பாடல்கள்

Dec 26, 2018 07:05 PM 2122

சின்னப் பயலே சின்னப் பயலே…

1961ஆம் ஆண்டில் வெளியான அரசிளங்குமரி படத்தில் இடம்பெற்ற பாடல் ‘சின்னப்பயலே சின்னப் பயலே சேதிகேளடா’. ‘எனது முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது, ஆனால் அதன் நான்காவது கால் பட்டுக் கோட்டையின் பாடல்கள்தான்’ - என்று எம்.ஜி.ஆர். அவர்களாலேயே போற்றப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளில் உருவான இந்தப் பாடலுக்கு, ஜி.ராமநாதன் இசை அமைக்க, டி.எம்.சவுந்தரராஜன் குரல் கொடுத்தார். தமிழ்த் திரையில் ஒலித்த பகுத்தறிவின் பெருமுழக்கம் இந்தப் பாடல்.

தாயில்லாமல் நானில்லை…

1969ஆம் ஆண்டில் வெளியான அடிமைப் பெண் படத்தில் இடம் பெற்றது தாயன்பை போற்றும் ‘தாயில்லாமல் நானில்லை’ பாடல். தனது தாய் சத்யா மீது மாறாத அன்பு கொண்ட எம்.ஜி.ஆர். தனது சொந்தத் தயாரிப்பான அடிமைப் பெண் படத்தில் விரும்பிச் சேர்த்த பாடல் இதுவாகும். இப்பாடலில் கே.வி.மகாதேவன் இசையில் வாலியின் வைர வரிகளுக்கு தன் குரலால் இனிமை சேர்த்தார் டி.எம்.சவுந்தரராஜன்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

1964-ம் ஆண்டு வெளிவந்த தெய்வத்தாய் படத்தில் இடம்பெற்ற மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடல் வெகுபிரபலம். அண்ணா என்பதும் மூன்றெழுத்து, எம்ஜிஆர் என்பதும் மூன்றெழுத்து. எனவே ரசிகர்கள் இந்த பாடலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். வாலி எழுத, டிஎம்எஸ் பாடிய இந்த பாடலில் எம்ஜிஆரின் ஸ்டைலும், அசத்தலான நடிப்பும் ரசிகர்களை கவர்ந்த ஒன்றாகும்.

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…:

1966ஆம் ஆண்டில் வெளியானது ஏவி.எம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ஒரே திரைப்படமான அன்பே வா. ’எனது படங்களில் எல்லாம் மாறுபட்டது’ - என்று எம்.ஜி.ஆர். அவர்களே சொன்ன இப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.சவுந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடிய இளமை குன்றாத பயணப் பாடலே ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’. காலங்கள் கடந்தாலும் பயணங்களின் போது இன்றும் பலரும் முணுமுணுக்கும் காதல் பாடலாக இது உள்ளது.

கரைமேல் பிறக்க வைத்தான்…

1964ல் வெளிவந்த படகோட்டி திரைப்படத்தில் வெளிவந்த ‘கரைமேல் பிறக்க வைத்தான்’ எனும் மீனவர் வாழ்க்கைப் பாடல், கேட்போரின் கண்களையெல்லாம் கடலாக்கும் வல்லமை கொண்டது. கவிஞர் வாலியை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்த பெருமைக்கு உரியது. மெல்லிசை மன்னர்களின் இசையில், வாலியின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருந்தார் டி.எம்.சவுந்தரராஜன்.

பச்சைக்கிளி முத்துச்சரம்…

1973ஆம் ஆண்டில் வெளிவந்தது ஹாலிவுட் படங்களுக்கு இணையாகப் பேசப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பச்சைக்கிளி முத்துச் சரம்’ பாடல் காதல் பாடலாக இருந்தாலும், அதில் வரும் ’பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ’ என்ற வரிகள் எம்.ஜி.ஆர். என்ற பொற்சிலையை வாலி வடித்த சொற்சிலையாக போற்றப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.சவுந்தரராஜனின் குரலில் மிளிர்ந்த பாடல் இது.


நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற...:

1975ஆம் ஆண்டில் வெளியான இதயக்கனி படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில், புலமைப் பித்தனின் வரிகளில் சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சவுந்தரராஜன், எஸ்.ஜானகி ஆகியோர் பாடியது ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற பாடல். இந்தப் பாடல் இல்லாமல் எந்த ஒரு அதிமுக கூட்டமும் நிறைவடையாது எனும் அளவுக்குக் காலத்தை வென்று மக்களை ஈர்க்கும் பாடல் இது.


அதோ அந்தப் பறவை போல…

1965ஆம் ஆண்டில் வெளிவந்து வரலாற்று வெற்றி பெற்ற ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’, எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா இருவரும் இணைந்து நடித்த முதல் படம் என்பது கூடுதல் சிறப்பு. மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் டி.எம்.சவுந்தரராஜன் இப்பாடலைப் பாடி இருந்தார்.

 

நான் ஆணையிட்டால்… அது நடந்துவிட்டால்…

1965ஆம் ஆண்டில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் மிக முக்கிய அங்கம் இந்தப் பாடல். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்வில் பின்னர் மெய்யாகின. மெல்லிசை மன்னர்களின் இசையில் வாலியின் வரிகளை எம்.எஸ்.விஸ்வநாதன் மீட்டிய பாடல் இது.

அச்சம் என்பது மடமையடா…

1960ஆம் ஆண்டில் வெளியான மன்னாதி மன்னன் படத்தில் இடம்பெற்ற பாடலே ‘அச்சம் என்பது மடமையடா’ பாடலாகும். எம்.ஜி.ஆர். அவர்கள் தனது காரில் எப்போதும் கேட்கும் பாடல் இதுவாகும். தன்னோடு அரசியல் களத்தில் முரண்பட்டு நின்ற கண்ணதாசனுக்கு தமிழக அரசவைக் கவிஞர் பதவியை எம்.ஜி.ஆர். அளிக்கக் காரணமாக இருந்த பாடல் இது. மெல்லிசை மன்னர்களின் இசையில் டி.எம்.சவுந்தரராஜன் இந்தப் பாடலை முழங்கினார்.

Comment

Successfully posted

Super User

good


Super User

super


Super User

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல...அத்தனையும் முத்துக்கள்...


Super User

காலத்தை கடந்த பாடல்கள்.. எம்.ஜி.ர் அவர்களின் தனி சிறப்பு...


Super User

காலத்தைவென்ற பாடல்கள்


Super User

butyful songs


Super User

samma


Super User

arumai MGR


Super User

அத்தனையும் காலத்தால் அழியாத இசைச் செல்வங்கள்


Super User

காலத்தால் அழியாத இசைச் செல்வம்


Super User

மறக்க முடியாத நினைவுகள்.