சுகாதாரமற்ற உணவால் ஊழியர்கள் பாதிப்பு - 17 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம்

Dec 19, 2021 02:46 PM 2152

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மாயமான விவகாரத்தில் நடந்த போராட்டத்தால், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 17 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பாக்ஸ்கான் நிறுவனத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், தொழிற்சாலைக்கு சொந்தமான விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

பூந்தமல்லியில் உள்ள விடுதியில் கடந்த புதன்கிழமை உணவு சாப்பிட்ட 200க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், வாந்தி மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் பூந்தமல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டு நாட்களுக்கு பின் அவர்கள் விடுதி திரும்பிய நிலையில், 8 பெண் ஊழியர்கள் விடுதி திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் தங்களது சொந்த ஊருக்கும் திரும்பாத நிலையில், சக ஊழியர்களின் நிலை குறித்த கேள்விக்கு விடுதி நிர்வாகம் மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளது.

image

இந்நிலையில் மாயமான பெண் ஊழியர்களில் சிலர் உயிரிழந்ததாகவும், அதனை ஆலை நிர்வாகம் மறைப்பதாகவம் கூறி சக ஊழியர்கள் சுங்குவார் சத்திரம் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2வது நாளாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.

உடல் உபாதை குறித்து விடுதி நிர்வாகத்திடம் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட தொழிற்சாலை ஊழியர் வேதனை தெரிவித்துள்ளார்.

உடல் உபாதையால் ஊழியர்களுக்கு முச்சுத் திணறல் ஏற்பட்டும் விடுதி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டுள்ளதாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஊழியரின் சகோதரி புகார் தெரிவித்துள்ளார்.

மாயமானதாக கூறப்படும் பெண்களில் இருவரிடம் வீடியோ கால் மூலம் மாவட்ட ஆட்சியர் பேசியதாக விளக்கம் அளித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தாங்கள் கூறியவர்கள் அவர்கள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

போராடிய ஊழியர்களோடு, ஆட்சியரும், திமுக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்தை தோல்வியடைந்தது.

பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலைமறியலில் ஈடுபட்டதால், 17 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Comment

Successfully posted