பழம்பெரும் குணச்சித்திர நடிகர் விசு மறைவிற்கு, திரையுலக பிரபலங்கள் அஞ்சலி

Mar 23, 2020 11:18 AM 8487

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான விசு, இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

நாடக நடிகர், தயாரிப்பாளர், வசன கர்த்தா, திரைப்பட நடிகர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்துடன் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் நடிகர் விசு. இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து அதன்பின் இயக்குநராக மாறிய விசு, கடந்த 1986 ம் ஆண்டு  சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தை இயக்கி நடித்தார். அந்த திரைப்படம் அவருக்கு பெயரையும் புகழையும் தேடி தந்ததுடன் அனைத்து இந்திய மொழிகளிலும் எடுக்கப்பட்டு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதையும்  பெற்றுத் தந்தது. அந்தத் திரைப்படத்தில் வரும் வசனங்கள் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

இதைத் தொடர்ந்து, தில்லு முல்லு, குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு, டௌரி கல்யாணம், திருமதி ஒரு வெகுமதி போன்ற பல்வேறு படங்களில் விசு நடித்துள்ளார். மன்னன், உழைப்பாளி போன்ற படங்களில் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்துள்ளார். குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களைக் கவர்ந்த  நடிகர் விசு, சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வந்தார். 74 வயதான விசு சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில்,  அவரது உயிர் நேற்று பிரிந்தது. நடிகர் விசுவுக்கு உமா என்ற மனைவியும் லாவண்யா, சங்கீதா, கல்பானா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.

இதனிடையே, விசுவின் உடல் இன்று பிற்பகல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள விசுவின் உடலுக்கு நடிகர் எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விசுவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பன்முக திரைக் கலைஞர் விசுவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related items

Comment

Successfully posted