உலக சுகாதார அமைப்பு உடனான உறவை துண்டிப்பதாக டிரம்ப் அறிவிப்பு!

May 30, 2020 09:05 AM 1145

கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகவும், இதற்கு கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு உள்ளதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு தருணங்களில் குற்றம்சாட்டி வந்தார். மேலும், உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை நிறுத்த போவதாகவும் அவர் எச்சரித்து வந்தார். இந்த நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், உலக சுகாதார அமைப்பு உடனான உறவை அமெரிக்கா துண்டிப்பதாக அறிவித்தார். கொரோனா வைரஸ், சீனாவால் மூடி மறைக்கப்பட்ட ஒரு குற்றவியல் சதித் திட்டம் என கடுமையாக சாடிய டிரம்ப், உலக சுகாதார அமைப்பும், சீனாவும் சேர்ந்து கொண்டு கொரோனா விவகாரத்தில் நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். சீனாவின் கைப்பாவை போல் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பிற்கு, அமெரிக்கா 450 மில்லியன் டாலர் நிதி அளித்து வருவதாக கூறிய டிரம்ப், வெறும் 40 மில்லியின் டாலர் நிதி அளிப்பதன் மூலம் உலக சுகாதார அமைப்பை சீனா கட்டுப்படுத்தி வருவதாக விமர்சனம் செய்தார். கொரோனா குறித்து ஆரம்ப கட்ட தகவல்களை உலக நாடுகளிடமிருந்து மறைத்த உலக சுகாதார அமைப்பு உடனான உறவை அமெரிக்கா துண்டிப்பதாகவும், இனி அந்த அமைப்பிற்கு அமெரிக்கா எந்த நிதியும் வழங்காது என்றும் அவர் அறிவித்தார். 

Comment

Successfully posted