தூத்துக்குடி புதுமண தம்பதியர் கொலை சம்பவம் : பெண்ணின் தந்தையிடம் விசாரணை

Jul 04, 2019 09:08 PM 323

தூத்துக்குடி அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் தந்தையை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த சோலைராஜன், ஜோதி ஆகியோர், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் சோலைராஜனின் சொந்த ஊரான குளத்தூரில் இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில், வியாழன் அன்று காலையில், சோலைராஜனின் வீட்டின் வெளியே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த பரபரப்பான சம்பவம் குறித்து குளத்தூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலையான பெண் ஜோதியின் உறவினர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கிடைத்த தகவலின் படி ஜோதியின் தந்தை அழகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted