200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி 99% அழிந்தது: அதிர்ச்சி அளிக்கும் புதிய ஆய்வு

Sep 09, 2019 09:43 PM 161

இன்று நாம் வாழும் உலகம் இதுவரை 5 ஊழிகளை சந்தித்ததாகவே நம்பப்பட்டு வந்தது. இதுவரை அறிவியலாளர்கள் அறியாத 6-வது ஊழி ஒன்று ‘ஆக்சிஜன் பற்றாக்குறை’யால் ஏற்பட்டது என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.

நாம் வாழும் பூமி 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. கடந்த காலங்களில் பூமி பல பேரழிவுகளைச் சந்தித்து உள்ளது. இந்தப் பேரழிவுகளில் எவையெல்லாம் பூமியின் மொத்த உயிரினங்களில் 50 சதவிகிதத்திற்கும் மேலான உயிரினங்களைக் கொன்றுள்ளதோ, அவற்றை நாம் ‘ஊழி’ என்று அழைக்கிறோம்.

இதுவரையிலான நிலவியல் ஆய்வுகள் பூமியில் 5 முறை ஊழிகள் நடந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளன. ஆய்வுகளின்படி பூமியின் முதல் ஊழி 44 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஐந்தாவது மற்றும் கடைசி ஊழி 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய விண்கல் ஒன்று பூமியில் மோதியதால் ஏற்பட்டது. இந்தக் கடைசி ஊழியில்தான் டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்தன.

இந்நிலையில், வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய ஊழி ஒன்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த ஊழியால் அன்றைக்கு உலகில் இருந்த 99% உயிரினங்கள் அழிந்தன என்பதால் இதுவரை புவி கண்ட ஊழிகளில் எல்லாம் பயங்கரமானதாக இந்த ஊழியே கருதப்படுகின்றது!

அமெரிக்காவின் ஆய்வு இதழான பி.என்.ஏ.எஸ். இதுபற்றிய கட்டுரையை கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. கனடாவின் ஹட்சன் வளைகுடா பகுதியில், இஸ்ரேலைச் சேர்ந்த ஆய்வாளர் பீட்டர் கிராக்போர்டு தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த ‘பாரைட்’ தனிமத்தில் இருந்துதான், 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியில் நடந்த மாபெரும் ஊழியின் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன!

ஆதாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட திடீர் ஆக்சிஜன் தட்டுப்பாடே இந்த பேரழிவுக்குக் காரணமாக இருந்துள்ளது. இந்தப் பேரழிவின் போது அன்றைக்கு நிலத்திலும் கடலிலும் வாழ்ந்த 99.5 சதவிகித உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் அழிவைச் சந்தித்து உள்ளன. இந்த ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் தாக்கங்கள் பாரைட் கனிமத்தின் புதைபடிமங்களில் கூட காணப்படுகின்றன. ஆனால் இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு எந்த குறிப்பிட்ட காரணத்தால் ஏற்பட்டது என்பதை ஆய்வில் கண்டுபிடிக்க முடியவில்லை!.

இன்றைய உலகில் வாகனப் புகை அதிகரித்து, காடுகளின் பரப்பு குறைந்துவருவதால் ஆக்சிஜன் அளவு பாதிக்கப்பட்டுவரும் சூழலில், அமெரிக்க அறிவியல் இதழின் இந்தப் புதிய கண்டுபிடிப்பு ‘மீண்டும் ஆக்சிஜன் தட்டுப்பாடு வந்தால், பூமியில் ஏழாவது ஊழி ஏற்படுமோ?’ என்ற அச்சத்தையே அறிவியலாளர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது. இந்தப் புதிய ஆய்வினால், புவியின் வரலாற்றையே மாற்றி எழுத வேண்டிய தேவையும்
ஏற்பட்டுள்ளது.

Comment

Successfully posted