சேலம் வனப்பகுதிகளில் மான் வேட்டையாடியவர்களில் இருவர் கைது

Jul 26, 2019 09:37 PM 266

சேலம் வனப்பகுதிகளில் தொடர் மான் வேட்டையில் ஈடுபட்ட கும்பலில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்ட எல்லை வனப்பகுதிகளில் மான் வேட்டை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மான்களை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை நகர்ப்பகுதியில் கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இந்த கும்பலை வனத்துறையினர் தேடி வந்த நிலையில், மான் இறைச்சியை பதுக்கி வைத்திருந்தபடி வந்த சொகுசு காரை வனக்காவலர்கள் பிடித்தனர். லோகநாதன் மற்றும் லட்சுமணன் ஆகிய 2 பேரை மடக்கி பிடித்தனர்.

காரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 14 கிலோ எடையுள்ள மான் கறி மற்றும் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted