ஐ.நா. சபைக்கு நிதி பற்றாக்குறை - அதன் சிறப்பு தொகுப்பு

Oct 13, 2019 06:48 PM 125

உலக அமைதியை ஏற்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபை, நிதி பற்றாக்குறையால் தள்ளாடுவதாகவும், மொத்த நிதியும் இந்த மாத இறுதிக்குள் தீர்ந்து பணம் இல்லாமல் போகக்கூடும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. ஐ.நா. சபையில் தற்போது 193 உறுப்பு நாடுகள் உள்ளன.

பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்தி மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இனம், மொழி மற்றும் சமய வேறுபாடுகளை களைந்து, சமுதாய பொருளாதார, பண்பாட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் போன்றவை ஐ.நா. சபையின் தலையாய பணிகள் ஆகும்.

ஐ.நா. சபையின் செயல்பாடுகளுக்கு அதன் உறுப்பு நாடுகள் நிதி வழங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபைக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உறுப்பு நாடுகளுக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் ஐ.நா.வுக்கு தேவையான நிதியை உறுப்பு நாடுகள் வழங்கும். இந்த நிலையில் ஐ.நா. சபை, நிதி பற்றாக்குறையால் தள்ளாடுவதாகவும், மொத்த நிதியும் இந்த மாத இறுதிக்குள் தீர்ந்து, சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபை 230 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,635 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரம்) பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருகிறது. ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தாமல் இருப்பதுதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

2018-19ஆம் ஆண்டுக்கான நிதியாக 5.4 பில்லியன் டாலர் (ரூ.38 ஆயிரத்து 399 கோடியே 40 லட்சம்) வரையறுக்கப்பட்டது. அதில் 22 சதவீத பங்களிப்பை அமெரிக்கா வழங்கியது. ஆனாலும் ஒட்டு மொத்த தொகையில் 70 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. ஐ.நா நிதி நெருக்கடியை சந்திக்கக்கூடும் என இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எச்சரிக்கப்பட்டது. ஆனால் உறுப்பு நாடுகள் அதை பொருட்படுத்தவில்லை.

தங்கள் பணப்புழக்க இருப்புக்களை இந்த மாத இறுதிக்குள் குறைக்கும் அபாயத்தை நாங்கள் உணருகிறோம் என்றும், நிதி ஆரோக்கியத்திற்கான இறுதி பொறுப்பு உறுப்பு நாடுகளிடம் உள்ளதாகவும் கூறிய அன்டணியோ குட்டரெஸ் , 37 ஆயிரம் ஊழியர்களின் ஊதியத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும், செலவுகளை குறைக்கும் விதமாகவும் மாநாடுகள் மற்றும் கூட்டங்களை ஒத்திவைத்தல் மற்றும் சேவைகளை குறைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது என முடிவெடுத்துள்ளோம்.
என அன்டணியோ குட்டரெஸ் கூறியுள்ளார் .

Comment

Successfully posted