பஞ்சமி நில விவகாரம் : தேசிய ஆதிதிராவிட ஆணையத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் ஆஜர்

Nov 19, 2019 12:19 PM 330

பஞ்சமி  நில விவகாரம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட ஆணையத்தில் இன்று, முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் ஆஜராக இருக்கிறார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி பத்திரிக்கையின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. இந்த இடம் பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து இவ்விவகாரம் பூதாகரமானது. முரசொலி நிலம் பஞ்சமி நிலமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முரசொலி இடப்பிரச்சனை குறித்து தேசிய ஆதிதிராவிட ஆணையத்தின் துணை தலைவரிடம், பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு பதிலளிக்கும் படி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தேசிய ஆதிதிராவிட ஆணையத்தின் அலுவலகத்தில் முரசொலி நில விவாகரம் தொடர்பாக பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடைபெறவுள்ளது. இதில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின், புகார் அளித்த பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் நேரில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

Comment

Successfully posted