ஊராட்சித் தலைவருக்கு தீண்டாமைக் கொடுமை, வழக்குப்பதிவு - தி.மு.க. நிர்வாகி தப்பியோட்டம்

Oct 10, 2020 04:47 PM 1679

சிதம்பரம் தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்த விவகாரம் தொடர்பாக, ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவராக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் பதவி வகித்து வருகிறார். ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நடைபெறும் போது, அவர் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜுலை மாதம் 17ம் தேதி நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்தில் ராஜேஸ்வரி பங்கேற்றுள்ளார். அப்போது, அவருக்கு இருக்கை வழங்கப்படாமல் தரையில் அமர வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி மன்றச் செயலாளர் சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை சஸ்பெண்ட் செய்து ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திமுகவை சேர்ந்த ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ், ஜாதி பெயரை கூறி தொடர்ந்து அவமதித்து வந்ததாக பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதேபோன்று, தெற்கு திட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர் சுகந்தி என்பவரும், தன்னை தரையில் அமரவைத்து அவமதிப்பு செய்தாக குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் பணியாற்றும்போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜின் தலையீடு இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

பட்டியலினப் பெண் அவமதிக்கப்பட்டது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தலைமையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஊராட்சிமன்றத் தலைவர் ராஜேஷ்வரி, ஊராட்சிமன்ற ஒன்றாவது வார்டு உறுப்பினர் சுகந்தி மற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த 5 ஊராட்சி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் ராஜை, விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Comment

Successfully posted