ஆடியோ உரையாடலில் இருப்பது தனது குரல்தான் - எடியூரப்பா ஒப்புதல்

Feb 11, 2019 08:00 AM 233

ஆடியோ உரையாடல் விவகாரத்தில் ஒப்புதல் அளித்த கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளநிலையில், மேலும், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. இன்னும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் பா.ஜனதா ஆட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகும்.

மீண்டும் ஆட்சியமைக்க முனைப்பு காட்டிவரும் பாஜக, காங்கிரஸ்- ஜனதா தள எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவிடம் எடியூரப்பா பேரம் பேசியதாகவும், இதுகுறித்த ஆடியோ உரையாடல் ஒன்றையும் முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டிருந்தார். இது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தநிலையில், பேரம் பேசியதாக வெளியான ஆடியோ உரையாடலில் இருப்பது தனது குரல்தான் என்று எடியூரப்பா ஒப்புக்கொண்டார். இதையடுத்து எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

Comment

Successfully posted