ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

Dec 27, 2019 06:12 AM 841

தமிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று மற்றும் வருகிற 30ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக இன்று 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலில் வாக்களிப்பதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் 1 கோடியே 30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குச் சீட்டு, மை, பேனா, முத்திரை, படிவங்கள் என ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான 72 பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வுதளம், வீல்சேர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமாகக் கொண்டு 114 வாக்குச்சாவடிகளில் செயல்படுத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியத்தில் லிங்கா வாடி ஊராட்சியில் லி.மலையூர் கிராமத்தில் 449 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக வாக்குப்பெட்டிகள் குதிரை மூலம் மலைகிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மலைக்கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பணியாற்றும் பணியாளர்களும், துப்பாக்கி ஏந்திய காவலர்களும் அங்கு சென்றனர்.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்யவும், இணையதள கண்காணிப்பு மூலம் கண்காணிக்கவும் மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க உள்ளார்.

இன்றும், வருகிற 30ஆம் தேதியும் பதிவாகும் வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

Comment

Successfully posted